அம்பாறையில் வெடிமருந்துக் களஞ்சியம் உடைக்கப்பட்டு திருட்டு

0 5

அம்பாறையில் அமைந்துள்ள வெடிமருந்துக் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு பாரியளவு வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அம்பாறையின் தமனை பொலிஸ் பிரிவுக்குபட்ட அலஹேன கிராமத்தில் அமைந்திருந்த வெடிமருந்துக் களஞ்சியமே உடைக்கப்பட்டு, அங்கிருந்த பாரியளவான வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதேசத்தின் கல் குவாரி உரிமையாளர்களின் வெடிபொருட்கள் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.

வெடிபொருள் களஞ்சிய அறையின் ஒரு சாவி அதன் உரிமையாளரிடமும் இன்னொன்று தமனை பொலிஸ் நிலையத்திலும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெடிபொருள் களஞ்சியசாலையின் மூன்று பூட்டுக்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த வெடிபொருட்கள் களவாடப்பட்டுள்ளது.

தற்போதைக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் 45 கிலோ எடைகொண்ட ஜெல் குச்சிகள், 10 மீற்றர் நீளமான இணைப்பு நூல், 25 சுருள்கள் மற்றும் 4100 டெடனேற்றர்கள் என்பன இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இந்த வெடிமருந்து களஞ்சியசாலைக்கு அருகில் பொலிஸ் காவலரண் ஒன்றும் இருந்த நிலையில் இந்தத் துணிகர திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தற்போது பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

Leave A Reply

Your email address will not be published.