வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைப் போக்கியில் இருந்து இன்றும் கறுப்பு புகை வெளியானது.
இது, இரண்டாவது தடவையாகவும், 133 கர்தினால்களும் இன்னும் ஒரு பாப்பரசரை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை கத்தோலிக்க மக்களுக்கு அறிவித்துள்ளது.
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வு இன்று (8) வத்திக்கானில் ஆரம்பமாகியுள்ளது.
இதன் நிமித்தம், 133 கத்தோலிக்க கர்தினால்கள், இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் மண்டபத்துக்குள் சென்றுள்ளார்கள் என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டின் முதல் நாளான நேற்று புதன்கிழமை, சிஸ்டைன் சேப்பலின் புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வெளியேறியது.
இது மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ்க்குப் பிறகு கர்தினால்கள், ஒரு புதிய பாப்பரசரை நேற்று தேர்ந்தெடுக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்தநிலையில் குறித்த தெரிவுத் தேர்தலினபோது, புதிய பாப்பரசராக தெரிவாகும் ஒருவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பது நியதியாகும்.
பாரம்பரியத்தின் படி, நேற்று ஒரு சுற்று வாக்களிப்பு நடந்தது.
இன்று மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஒரு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் நான்கு சுற்று வாக்களிப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.