”கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு மீட்கப்படுவதே கடற்றொழிலாளர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,”இலங்கை செல்லும் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள், போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக கடற்றொழிலாளர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில கடற்றொழிலாளர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.
நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.
ஒன்றிய பிரதமர், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.
நமது கடற்றொழிலாளர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக கடற்றொழிலாளர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.