அழகான தோற்றம் குறித்த இளம் பெண்களின் ஆசையைத் தூண்டி, அதன் மூலம் சிங்கள நடிகை பியூமி ஹங்சமாலி கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்திருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பிரபல சிங்கள நடிகையான பியூமி ஹங்சமாலி, மிகக்குறுகிய காலத்தில் பாரிய சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டுள்ளதாகவும், சொகுசுக் கார்கள், ஆடம்பர இல்லங்கள் என்று அவருக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், அரசியல்வாதிகள் உள்ளிட்ட சமூகத்தின் முக்கிய புள்ளிகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
“மகென் ரடட” அமைப்பின் மூலம் சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைகள் பிரிவுக்கு இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இரண்டாயிரம் தொடக்கம் ஆறாயிரம் ரூபாவுக்குள் மிகக்குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் அழகுசாதன கிரீம்களை 28 ஆயிரம் தொடக்கம் 35 ஆயிரம் ரூபா வரையான அதிக விலைக்கு பியூமி ஹங்சமாலி விற்பனை செய்து கொள்ளை லாபமீட்டுவது தெரியவந்துள்ளது.
அத்துடன் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் பை பயன்படுத்தி குறித்த கிரீம் வகைகளை பிரபல்யப்படுத்தி உள்ளார். அதன் மூலம் நாளொன்றுக்கு பத்து தொடக்கம் பதினைந்து லட்சம் வரையில் அவர் வருமானமீட்டிக் கொண்டுள்ளார்.
அதனைக் கொண்டு 700 லட்சம் பெறுமதியான ஜீப் வண்டியொன்றையும், 280 லட்சம் பெறுமதியான சொகுசுக் கார் ஒன்றையும் அவர் கொள்வனவு செய்துள்ளார்.
அத்துடன் கொழும்பின் ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் 1400 லட்சம் ரூபாயில் ஆடம்பர மனையொன்றையும் கொள்வனவு செய்துள்ளார். அதற்கு மேலதிகமாக இன்னும் பல சொத்துக்களையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.
எனினும் இந்த சொத்துக்கள் அனைத்தும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக மட்டும் கிடைத்த வருமானத்தில் கொள்வனவு செய்யப்பட்டதா என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.