சாலை விதி மீறுபவர்களை காட்டி கொடுத்தால் ரூ.17000 பரிசு! சாலைகளில் கேமராவுடன் உட்கார தயாராகும் மக்கள்
வியட்நாம் அரசு, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், சாலை விதி மீறல்களை புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் திகதி முதல், சாலை விதி மீறலை ஆதாரத்துடன் புகார் அளிக்கும் நபர்களுக்கு, 200 அமெரிக்க டொலர்கள் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,144.15 ஆகும். அதாவது, அபராதத் தொகையில் 10% வரை பொதுமக்களுக்கு பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலர்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் சாலை போக்குவரத்தை கண்காணிக்க முடியாது என்பதால், இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றொரு முயற்சியாக, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சாலை விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் 30% அதிகரிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், பிற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உதாரணமாக, சிவப்பு சிக்னலை மீறி செல்லும் குற்றத்திற்கு விதிக்கப்படும் அபராதத் தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பிற சிறிய குற்றங்களுக்கும், முன்பு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை விட 30 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது.