பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு பிச்சை வாங்குவதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு ஜனவரி 2-ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இது குறித்து அரசுக்கு தகவல் அளிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பொதுமக்கள் தகவல்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த எண்ணில் தொடர்பு கொண்டு 200 பேர் தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் அளித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா ரூ.1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும்.
கடந்த 4 மாதங்களில் இந்தூரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கும், 64 பேர் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.