ஆதாம் மற்றும் ஏவாளின் பல நூற்றாண்டுகள் பழமையான கதை பைபிளில் கூறப்பட்டுள்ளது.
இதில் இருவரும் பூமியின் முதல் ஆணாகவும் பெண்ணாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் களிமண்ணால் உருவாக்கப்பட்டதாகவும், ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கதை கிறிஸ்தவத்தின் முக்கிய பகுதியாகும். கிறித்துவ மதத்தின் படி, ஆதாம் மற்றும் ஏவாள் பூமியில் வாழும் மனிதர்களின் மூதாதையர்கள் ஆவர்.
இந்த கதையின் சில பகுதிகள் உண்மையாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து வருகின்றனர்.
ஏதேன் தோட்டம் ஒரு அழகான மற்றும் செழிப்பான இடமாக பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளது.
இது நான்கு நதிகளைக் குறிப்பிடுகிறது, பிஷோன், கிஹோன், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் ஆகும்.
டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் இன்றும் ஈராக்கில் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் பிஷோன் மற்றும் கிஹோன் ஆகியவை தெரியவில்லை.
ஏடன் தோட்டம் மெசபடோமிய பகுதியில் அமைந்திருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த பகுதி டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் உள்ளது மற்றும் நவீன ஈராக், கிழக்கு சிரியா மற்றும் வடமேற்கு டர்கியே வரை நீண்டுள்ளது.
மெசபடோமியா ‘வளமான பிறை’ என்று அழைக்கப்படுகிறது.
இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சுமார் 10,000-20,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
இந்த பகுதி மனித நாகரிகத்தின் ஆரம்ப இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
உயிருள்ள மனிதர்கள் அனைவரும் ஒற்றைப் பெண்ணிலிருந்து பிறந்தவர்கள் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது ‘மைட்டோகாண்ட்ரியல் ஈவ்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பெண் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்தவர். அதேபோல் ‘ஒய்-குரோமோசோம் ஆடம்’ 1.8 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆண்களின் பொதுவான மூதாதையராகக் கருதப்படுகிறது.
இருப்பினும் இருவரும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே இடத்தில் வாழ்ந்தார்கள் என்பது அவசியமில்லை.
அவர்கள் பூமியில் இருந்த மற்ற மனிதர்களில் இருந்தனர். மேலும் அவற்றின் சிறப்பு முக்கியத்துவம் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இதற்கும் தெய்வத்திற்கும் சம்மந்தமில்லை.
சில விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அறிவியலையும் பைபிளின் கதையையும் ஒன்றாக இணைக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
வாஷிங்டன் பல்கலைகழகத்தின் உயிரியலாளர் டாக்டர் ஜோசுவா கூறுகையில், எல்லா மனிதர்களும் ஒரு ஜோடியிலிருந்து பிறந்திருக்கலாம்.
இருப்பினும், ஆதாம் மற்றும் ஏவாளை மனிதர்களின் முதல் ஜோடியாகக் கருதுவதற்கு, அவர்கள் ஹோமோ சேபியன்கள் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஹூஸ்டன் கிறிஸ்டியன் பல்கலைக்கழக பேராசிரியர் வில்லியம் லேன் கிரெய்க், ஆதாம் மற்றும் ஈவ் சுமார் 1 மில்லியன் முதல் 7.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று வாதிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.