பிரித்தானியாவின் Southport பகுதியில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட குடியிருப்பு வளாகம் அருகே அமைந்துள்ள மசூதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஏற்பட்டுள்ளனர்.
பொலிஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், திரளான மக்கள் அதிகாரிகளுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து வெளியான அதிர்ச்சியூட்டும் காணொளி காட்சிகளில் பொலிஸ் வேன்கள் மீது போத்தல்கள் மற்றும் செங்கல்கள் வீசப்பட்டுள்ளது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் Merseyside பொலிசார் தெரிவிக்கையில், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னால் English Defence League என்ற அமைப்பு இருக்கலாம் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
Southport பகுதியில் அமைந்துள்ள மசூதிக்கு வெளியே திரண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலவரத் தடுப்பு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பட்டப்பகலில் 17 வயது சிறுவன் முன்னெடுத்த நடுங்கவைக்கும் கத்திக்குத்து சம்பவத்தில், நாடே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
அப்பாவி சிறார்கள் 8 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 5 பேர்கள் தற்போதும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதில் மரணமடைந்துள்ள மூன்று சிறுமிகள் தொடர்பில், பெயர் உள்ளிட்ட தரவுகள் இன்று பகல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இன்று திரண்ட மக்கள், அப்பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணற, அதன் பின்னர் கலவரத் தடுப்பு பொலிசார் களமிறக்கப்பட்டனர். தற்போது மசூதிக்கு வெளியே திரண்ட மக்களை அப்புறப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.
தற்போதைய இந்த வன்முறைக்கு காரணம், கைதான தாக்குதல்தாரி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களே என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 17 வயது நபர் தற்போதும் பொலிஸ் காவலில் உள்ளார். மட்டுமின்றி சில தனிப்பட்ட நபர்கள், இந்த விவகாரத்தை குறிப்பிட்டு, தங்கள் தெருக்களில் வன்முறையை தூண்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், பொலிசார் தெரிவிக்கையில், கைதான நபர் பிரித்தானியாவில் பிறந்தவர், அவர் தொடர்பில் வெளியாகும் தகவல்களால் எவருக்கும் அது பயன்படப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
சிறார்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரம் தீவிரவாதச் செயல் அல்ல என்றும் Merseyside பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.