இலங்கையில் அடுத்தடுத்த விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0 2

இலங்கை நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பேருந்துகளில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு நேரங்களில் நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை அமல்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளை சிறப்பு ஆய்வு செய்வதற்காக, பொலிஸ் பிரிவுகளுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருத்தமான இடங்களில் இரவில் அதிகாரிகள் குழுக்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதியில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் பேருந்துகளை ஆய்வு செய்து சட்டத்தை அமல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவுகளின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 30 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.