வர்த்தக சலுகைகளுக்கு ஈடாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானுடனான இந்திய இராணுவத்தின் கடுமையான மோதலைத் தொடர்ந்து புது டில்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள உயர் தலைவர்கள் கடந்த வாரம் தொடர்பில் இருந்தனர், ஆனால் வர்த்தகம் குறித்து எந்த உரையாடலும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விவாதங்களில் எதிலும் வர்த்தகப் பிரச்சினை குறித்த கருத்துக்கள் எதுவும் எழவில்லை,” என்று ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கும் அவரது இந்தியப் பிரதிநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் இடையேயும் நடந்த உரையாடல்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, நிலம், வான் மற்றும் கடல் வழியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட போர்நிறுத்தத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சனிக்கிழமை புரிந்துணரை்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து, திங்களன்று செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறுகையில், இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக்கொண்டால் வர்த்தகத்தில் உதவ முன்வந்ததாகக் கூறினார்.
“நான் சொன்னேன், வாருங்கள், நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். அதை நிறுத்துவோம்.
நீங்கள் அதை நிறுத்தினால், நாங்கள் ஒரு வர்த்தகம் செய்வோம். நீங்கள் அதை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை,” என்று ட்ரம்ப் கூறினார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவங்கள் பல தசாப்தங்களில் மிகக் கடுமையான மோதலில் ஈடுபட்டன.
இந்தியா பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கியபோது, கடந்த மாதம் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளின் படுகொலைக்கு காரணமான தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறியது.
இதற்கிடையில், செவ்வாயன்று ட்ரம்பின் மத்தியஸ்த கருத்தை புது டில்லி நிராகரித்தது.
“ஜம்மு காஷ்மீர் கூட்டாட்சி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்ற நீண்டகால தேசிய நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். கூறப்பட்ட கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” என்று ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.