கொழும்புத் துறைமுகத்துக்குப் போட்டியாக இந்தியாவின் கேரளா விழிஞ்சம் ( Vizhinjam Port ) பகுதியில் அதானி குழுமம் சார்பாக கட்டப்பட்டிருக்கும் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
8,800 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பெரிய சரக்கு கப்பல்கள் வந்து நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கும் வகையில் பெரிய துறைமுகங்கள் கிடையாது.
இதனால் இந்தியா வெளிநாடுகளின் துறைமுகங்கள் வாயிலாகவே கப்பல்களில் சரக்குகளை அனுப்பி வைத்து வந்தது.
தற்போதைக்கு இந்தியாவிற்கு வர வேண்டிய சரக்கு கப்பல்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், கொழும்பு, துபாய் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து சிறு சிறு கப்பல்கள் மூலம் தான் இந்தியாவிற்கு சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன.
அதேபோல் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பொருட்களும் இங்கு இருந்து சிறுசிறு கப்பல்கள் வழியாக சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் பெரிய கப்பல்களை கையாளும் துறைமுகம் இல்லாததே இதற்கு காரணமாகும். இதனால் இந்தியா கப்பலில் சரக்குகளை அனுப்பி வைப்பதற்கு அதிக அளவிலான தொகையை செலவிட வேண்டி இருந்தது.
தற்போது பெரிய சரக்கு கப்பல்களை கையாளும் திறன் கொண்டு துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் இந்தியா இனி இந்த கூடுதல் தொகையை செலவிட வேண்டியது கிடையாது.
இதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் 220 மில்லியன் டொலர் சேமிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சர்வதேச கடல் வழி வணிகத்தில் இந்த விழிஞ்சம் துறைமுகம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்தறு.
அதே நேரம் கொழும்புத்துறைமுகத்தின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.
விழிஞ்சத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த துறைமுகமானது பெரிய சரக்கு கப்பல்கள், டேங்கர் கப்பல்கள் வந்து சரக்குகளை ஏற்றி இறக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.
இந்த துறைமுகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கடல் ஆழம் 18 முதல் 20 மீட்டர்கள் வரம் இருப்பதால் பெரிய பெரிய கப்பல்களை கையாள்வது எளிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக அடுத்த தலைமுறை சரக்கு கப்பல்கள் அதாவது 24000 +TEU திறன் கொண்ட கப்பல்களை கூட விழிஞ்சம் துறைமுகம் கையாளும் திறன் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஏப்ரல் மாதம் MSC Turkiye என்ற மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனியின் மிகப்பெரிய கண்டெய்னர் கப்பல் விழிஞ்சம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
400 மீட்டர் நீளம், 61 மீட்டர் அகலம் மற்றும் 34 மீட்டர் ஆழம் கொண்ட இந்த எம்எஸ்சி கப்பல் 24,300 TEU திறன் கொண்டது.
உலகின் பெரிய கண்டெய்னர் கப்பல் இதுவாகும். இந்த கப்பலையே விழிஞ்சம் துறைமுகத்தில் நிறுத்தி சரக்குகளை கையாண்டிருக்கின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி நிறுவனத்திற்கு சொந்தமான அதானி போர்ட் நிறுவனம் தான் விழிஞ்சம் துறைமுகத்தை கட்டமைத்திருக்கிறது. இந்திய துணை கண்டத்தின் ஒரே டிரான்ஸ் ஸிப்மென்ட் ஹப்பாக இது இருக்கிறது.
இந்த விழிஞ்சம் துறைமுகத்தின் வாயிலாக இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் ஒவ்வொரு கண்டெய்னருக்கும் இதுநாள் வரை செலவு செய்து வந்த 80 இலிருந்து 100 டொலர்கள் வரையிலான தொகையை மிச்சப்படுத்த முடியும்.
இந்த துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து சோதனை முயற்சி கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதமே தொடங்கியது. தற்போது ஆழ் கடல் சரக்கு போக்குவரத்து துறைமுகமாக இது கட்டப்பட்டிருப்பதால் இனி 20 ஆயிரம் கண்டைனர்களைக் கொண்ட எந்த சரக்கு கப்பலும் இந்தியாவிற்கு நேரடியாக வரலாம்.
சர்வதேச கடல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவிலேயே துறைமுகம் அமைந்திருப்பதால் கடல் வணிகப் போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறது.
இதன் காரணமாக சர்வதேச கடல் வணிகத்தில் கொழும்புத் துறைமுகம் இதுகால வரையும் பெற்று வந்த முக்கியத்துவம் எதிர்வரும் காலங்களில் கணிசமான அளவில் குறைந்து போகும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.