உக்ரைனின் மத்திய நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்ததுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாக உள்ளதாகவும், இதன்போது, 6 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் கொலை செய்யப்பட்டமைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.
பிராந்திய ஆளுநர் செர்ஹி லிசாக் வெளியிட்டுள்ள தகவலில், இந்த வெடிகுண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்பதற்கான தெளிவான மற்றும் கசப்பான சான்றாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்கள் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த வன்முறை நீடிப்பதற்கு ஒரே காரணம் ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பாதது தான். இது உலகத்துக்கே தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
“ரஷ்யாவின் மீது சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலமும், உக்ரைனின் விமான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், நமது இராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் மூலமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.