365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பள்ளி.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

0 1

ஆண்டுக்கு 365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் உள்ள பழங்குடியின கிராமம் ஒன்றில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பள்ளி இயங்கி வருகிறது. இதனை, மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் டாடா பூஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

திரிம்பகேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹிவாலி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி உள்ளது. இந்த பள்ளியானது 365 நாட்களும், ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் இயங்குகிறது.

இங்கு படிக்கும் மாணவர்கள் வகுப்பறை பாடங்களை மட்டுமல்லாமல் வெல்டிங், மின்சார வேலை மற்றும் இயற்கை விவசாயம் போன்றவற்றை பயின்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இங்கு சேரும் மாணவர்கள் படிக்காத மற்றும் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தாலும் அசாதாரண திறமையுடன் வெளிவருகின்றனர். பள்ளியின் பாடத்திட்டத்தில் பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

பள்ளியின் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்தாலும் இங்குள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காலையில் பிரார்த்தனையில் இருந்து தொடங்கி, சில சமூகப் பணிகள், உடற்பயிற்சி, எழுதுதல், கடைசியாக பள்ளியில் இரண்டு முறை உணவு இடைவேளையுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், எழுத்துப் பயிற்சி வழங்குதல், வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்தல் என இங்குள்ள மாணவர்கள் தினமும் தங்களது கற்றல் திறனை மேம்படுத்துகின்றனர்.

பள்ளிகளின் சுவர்களில் அழகான வார்லி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனை படிப்பு நேரம் முடிந்து வரைந்தோம். கிராமத்தில் உள்ள சில வீடுகளும் வர்ணம் பூசப்பட்டுள்ளன என்று மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த மாணவர், “நாங்கள் ஆண்டு முழுவதும் பள்ளிக்குச் செல்கிறோம். அங்கு, இரண்டு வேளை உணவு வழங்கப்படுகிறது. எனது நண்பர்கள் அனைவரும் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் உள்ளனர்.

சில நேரங்களில் பள்ளியில் உள்ள மூத்த மாணவர்கள் இளையவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். ஒன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கான YouTube அணுகலையும் நாங்கள் பெற்றுள்ளோம்” என்றார்.

ஜில்லா பரிஷத் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றும் கேசவ் கவித் என்பவர் கூறுகையில், “கற்றல் மீதான இந்த அர்ப்பணிப்பு குழந்தைகளிடையே படிப்பின் மீது ஆழமான அன்பை வளர்ப்பது மட்டுமல்லாமல் கல்வித் திறன்களையும் வளர்த்துள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.