உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளின் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்பின் மிக நெருக்கமான கூட்டாளியான எலோன் மஸ்க், சமீபத்தில் ஜேர்மனி உள்ளூர் அரசியல் தொடர்பிலும், பிரித்தானியாவின் அரசியல் நகர்வுகள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சம்பவத்தை அடுத்து, சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் ஜேர்மனியின் புலம்பெயர் மக்களுக்கு எதிரான கட்சியை ஆதரித்து கடந்த மாதம் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஜேர்மனியில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களின் அபரிமிதமான அணுகல் மற்றும் மிகப்பெரிய பொருளாதார வளங்களைக் கொண்டுள்ள ஒருவர் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் நேரடியாக தலையிடுவது தமக்கு கவலை அளிக்கிறது என நார்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
இப்படியான சூழல் ஜனநாயக நாடுகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையில் இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நார்வே அரசியலில் எலோன் மஸ்க் தலையிடுவதாக இருந்தால்
நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவரது கருத்துக்களை புறந்தள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தீவிர வலதுசாரிகள் கூட்டணியுடன் ஒப்பிடும்போது பிரதமர் ஸ்டோரின் கூட்டணி பின்தங்கி உள்ளது என்றே கூறப்படுகிறது.
எலோன் மஸ்க் சமீப காலமாக தீவிர வலதுசாரி அமைப்புகள் மற்றும் கட்சிகளை ஆதரித்தும் வருகிறார். மேலும், நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக சுமார் 250 மில்லியன் டொலர் தொகையை எலோன் மஸ்க் செலவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ட்ரம்ப் நிர்வாகத்தில் அமைச்சரல்லாத ஒரு முதன்மையான பொறுப்புக்கும் எலோன் மஸ்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எலோன் மஸ்க் வலதுசாரிகளை ஆதரிப்பதன் ஊடாக திட்டமிட்டே ஐரோப்பாவை பலவீனப்படுத்த முயல்கிறார் என்ற குற்றச்சாட்டை கடந்த வாரம் ஜேர்மனி முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.