கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

0 1

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்(M.K.Stalin) வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தமே, நீடிக்கும் இந்தப் பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கிறது.

1974-ம் ஆண்டில், கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டபோது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கடுமையாக எதிர்த்தனர்.

28.06.1974 அன்று மத்திய அரச, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக மறுநாளே, அதாவது 29.06.1974 அன்று, தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள், கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021 ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டில், 530 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதேநேரம், 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது; அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன.

இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இந்திய கடற்றொழிலாளர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பது மாத்திரமே என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.