அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி முறையால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, நாட்டுக்கு கடுமையான நஷ்டங்கள் ஏற்படக்கூடும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பொருட்கள்—ஆடை, தேயிலை, தேங்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றின் விலை 44% உயரும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த வரி காரணமாக இலங்கை பொருட்களுக்கு மாற்றாக, குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகளிலிருந்து அமெரிக்க விற்பனையாளர்கள் பொருட்களை இறக்குமதி செய்யக் கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கையின் ஏற்றுமதி குறையும், விலை உயர்ந்ததால் போட்டித்திறன் இழக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஆடைத் தொழில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் எனவும், ஏற்றுமதி நிறுவனங்கள் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு மாறக் கூடும் எனவும், வேலைவாய்ப்புகள் குறையும் எனவும், முதலீடுகள் மற்றும் வருமானம் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா 2024 செப்டம்பரில் வரி விதிக்கலாம் என அறிவித்தபோதும், இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
2025 ஜனவரியில் அமெரிக்கா மெக்ஸிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதித்ததை தொடர்ந்து, இலங்கைக்கும் அதே நிலைமை ஏற்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.