அநுர தரப்பின் யோசனைக்கு மனோ ஆதரவு குரல்

8

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய இன பிரச்சினை தொடர்பான சவாலுக்கு முன்வைத்துள்ள யோசனையை தாம் வரவேற்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன்வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னேடுப்போம் என ஜனாதிபதி தெரிவித்ததாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.

“அநுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்திற்கு உள்ளேயே நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டும் என்ற குறுகிய அரசியலையும் நாம் செய்யவில்லை.

அதே போல புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்க பட வேண்டும் என நாம் எண்ணுகிறோம்.

இந்நோக்கில், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், வடகிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம்.

இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் நல்லாட்சி காலத்தில் நாம் அனைவரும் அன்று ஆரம்பித்த, புதிய அரசியலமைப்பை எழுதும் சர்வ கட்சி பணியை தொடர போவதாக ஜனாதிபதி அநுர திசாநாயக்க அறிவித்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும், அரசியல் யாப்பை உருவாக்கும் உரையாடலில் ஆளுமையும், அனுபவமும் உள்ள சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பங்கு பெற வேண்டுமா? இல்லையா? என்பதை தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்’’ என்றார்.

Comments are closed.