வளர்ப்பு கிளியால் நிலச்சரிவில் உயிர்தப்பிய குடும்பம்.., நெகிழ்ச்சி சம்பவம்

12

வயநாடு நிலச்சரிவில் வளர்ப்பு கிளி எச்சரிக்கை கொடுத்ததால் குடும்பமே உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே பறவைகள் மற்றும் விலங்குகள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறியும் திறன் உடையவை. அந்தவகையில், இளைஞர் ஒருவர் வளர்த்த கிளி கொடுத்த எச்சரிக்கையால் அவரது குடும்பம் நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பியுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலையைச் சேர்ந்தவர் வினோத். இவர், கிங்கினி என்ற செல்லக்கிளியை வளர்த்து வந்துள்ளார்.

இவர் தனது குடும்பத்தினருடன் காலனி சாலை என்ற பகுதியில் உள்ள தனது சகோதரி நந்தாவின் வீட்டிற்கு நிலச்சரிவுக்கு முந்தைய நாள் சென்றுள்ளார். அப்போது, தனது கிளியையும் அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து, இரண்டாவது நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பாக தனது கூண்டுக்குள் கிளி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்பு, பயங்கர சத்தத்துடன் அலற தொடங்கியுள்ளது.

இந்த சத்தத்தை கேட்டு எழுந்து பார்த்த வினோத் ஏதோ பிரச்னை ஏற்படப்போகிறது என்று உணர்ந்துள்ளார். பின்னர், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜிஜின், பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரை அழைத்துள்ளார்.

அப்போது, வீட்டிற்கு வெளியே சேற்று நீர் வழிந்தோடுவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதில் நிலச்சரிவில் வினோத் மற்றும் ஜிஜின் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரின் வீடுகள் ஓரளவு சேதம் அடைந்துள்ளன.

தற்போது, வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர்.

Comments are closed.