இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு துறை தகவல்களில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, இராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை அவர் ஏற்கவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவ தளபதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அவர்கள் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
அப்போது ஹசீனாவின் தங்கை ரெகானா ஆட்சியை இராணுவத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தினார். அமெரிக்காவில் வசிக்கும் ஹசீனாவின் மகன் ஷாஜிப் வாஸத் ஜாய் டெல்லியில் வசிக்கும் மகள் சைமா வாஸத் ஆகியோர் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விட்டு பங்களாதேஷை வெளியேறுமாறு கோரியுள்ளனர்.
பின்னர் பங்களாதேஷின் விமானப் படையின் சி-130 ரக விமானத்துக்கு மாறிய அவர் இந்தியா நோக்கி சென்றுள்ளார்.
அந்த விமானத்தில் ஹசீனாவுடன் அவரது தங்கை ரெகானாவும் இருந்துள்ளார்.
விமானிகள் உட்பட பங்களாதேஷ இராணுவத்தை சேர்ந்த 7 மூத்த தளபதிகளும் விமானத்தில் பயணித்துள்ளனர்.
ஹசீனாவின் விமானம் மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. ஹசீனாவின் வருகை குறித்து இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வாக பறந்த அவரது விமானத்தின் வருகையறிந்து இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் மேற்குவங்கத்தின் ஹசிமரா விமானப்படைத் தளத்தில் இருந்து 2 ரஃபேல் போர் விமானங்கள் பாதுகாப்பு அரணாக உடன் சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி இராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் பங்களாதேஷ் விமானத்தின் பாதையை தரைக் கட்டுப்பாடு மையங்களில் இருந்து உன்னிப்பாகக் கண்காணித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை 5.45 மணிக்கு டெல்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் பங்களாதேஷின் விமானம் தரையிறங்கியுள்ளது.
Comments are closed.