பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மற்றும் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள இலங்கை (Sri Lanka) மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஜப்பான் (Japan) வரவேற்றுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் (Ali Sabry) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை நேற்று (02) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவு மற்றும் அவற்றை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய நிதி உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அலி சப்ரியுடன் இடம்பெற்ற சந்திப்பு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் என தான் நம்புவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.