இலங்கையின் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 27,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம்(21.05.2025) வெளியிடப்பட்டது.
அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 1,800 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு 3ஆம் இலக்க தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் 3ஆம் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 9,500 ரூபாவாலும் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 380 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல், குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 3,000 ரூபாவாலும் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 120 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல், அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.