இந்தியாவின் ஆயுத களஞ்சியசாலை இலங்கையில்!

0 1

இந்தியாவினால், இலங்கையில் ஆயுத களஞ்சியசாலையை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்றில் பகிரங்க கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,

“இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துவதில் அரசாங்கம் ஏன் பின்வாங்குகிறது.

இந்த அரசாங்கம் இந்தியாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதற்பகுதியில் 7 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. அதேபோல் சீனாவுடனும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் ஏதும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அண்மையில் வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் இதுவரையில் அந்த ஒப்பந்தங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை சமர்ப்பிப்பதாயின் இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் அனுமதியை பெற வேண்டுமாயின் ஒப்பந்தத்தை கைச்சாத்திடாமல் இருந்திருக்கலாம். இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் பிரதான செய்தி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் ‘ இலங்கையில் ஆயுத களஞ்சியசாலையை இந்தியாவினால் உருவாக்க முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் உண்மை தன்மை என்னவென்பதை இந்த நாடாளுமன்றம் அறிந்துக் கொள்ள கூடாதா, இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு இந்த அரசாங்கம் ஏன் பின்வாங்குகிறது.

கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி எட்கா, சோபா மற்றும் இந்தியாவுடனான பல ஒப்பந்தங்களை கடுமையாக எதிர்த்தது. ‘ இந்தியாவுடனான திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிவோம்’ என்று நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தீர்கள் இன்று என்ன செய்கின்றீர்கள்.

இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக இருந்து சீனாவுக்கு எதிராக செயற்படுகின்றன. இந்த நாடுகளுடன் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது ஏனைய நாடுகளால் அது உன்னிப்பாக பார்க்கப்படும்” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.