மத்திய கிழக்கில் ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்

0 1

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சியின் போது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

பின்னர், அவர் நாட்டை விட்டு ஓடிய போதும் தடைகள் தொடர்ந்ததுடன், தற்போது நீக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியாவில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென உள்நாட்டு போர் வெடித்த நிலையில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஜனாதிபதியாக இருந்த அசாத் அங்கிருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.

ஹெடிஎஸ் அமைப்பினர் அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அகமது அல்-ஷரா இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

முன்னதாக அங்கு 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்த நிலையில், அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாராத தடைகளை விதித்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. எனினும் தற்போது அது முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

தற்போது ட்ரம்ப், சிரியா மீதான நீண்டகாலத் தடைகளை அமெரிக்கா நீக்கும் என்றும், அமெரிக்காவில் 600 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடடை சவுதி அரேபியா மேற்கொள்ளவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு கிட்டத்தட்ட 142 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதப் பொதியை விற்க ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது வாஷிங்டன் இதுவரை செய்து கொண்ட மிகப்பெரிய “பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் முடிவுக்கு வருவது, ஒரு தசாப்தத்திற்கும் மேலான உள்நாட்டுப் போரால் சிதைந்துபோன ஒரு நாட்டிற்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். தற்போதைய ஜனாதிபதி அகமது அல்-ஷரா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் கடந்த டிசம்பரில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை கவிழ்த்தனர்.

குறித்த ஒப்பந்தங்களை மையமாகக் கொண்ட பயணத்தின் தொடக்கத்தில் ரியாத்தில் நடந்த முதலீட்டு மன்றத்தில் பேசிய ட்ரம்ப், இது ஒரு பரபரப்பான ராஜதந்திரத்தையும் கொண்டது, சவுதி அரேபியாவின் நடைமுறை ஆட்சியாளரான இளவரசர் முகமது பின் சல்மானின் தடைகளை நீக்குவதற்கான கோரிக்கையின் பேரில் தான் செயல்படுவதாகக் கூறினார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் ஒரு பெரிய கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது. 1979 ஆம் ஆண்டில் சிரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்தது.

2004 இல் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் 2011இல் உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

சிரியாவின் மறுகட்டமைப்புப் பாதையில் திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு “புதிய தொடக்கத்தை” குறிக்கிறது என்று சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷிபானி X இல் தெரிவித்தார்.

புதன்கிழமை சவுதி அரேபியாவில் ஷாராவை சுருக்கமாக வரவேற்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி, பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தில் ட்ரம்பும் சவுதி பட்டத்து இளவரசரும் கையெழுத்திட்டனர்.

இஸ்ரேலுடனான பிராந்திய உறவுகளை மேம்படுத்தவும், ஈரானுக்கு எதிராக ஒரு அரணாக செயல்படவும் சவுதிகளுடன் உறவுகளை வலுப்படுத்த ட்ரம்ப் முயன்றுள்ளார்.

இந்த ஒப்பந்தம், வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு, விமானப்படை மற்றும் விண்வெளி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளுக்கான ஒரு டஜன் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை உள்ளடக்கியது என்று வெள்ளை மாளிகையின் உண்மைத் தாள் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் லாக்ஹீட் எஃப்-35 ஜெட் விமானங்களும் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும், இது குறித்து விவாதிக்கப்பட்டதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களில் மேலும் ஒப்பந்தங்கள் எட்டப்படும்போது மொத்த தொகுப்பு 1 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று சவுதி இளவரசர் கூறினார்.

அமெரிக்க ஆயுதங்களுக்கான மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும், மேலும் இரு நாடுகளும் பல தசாப்தங்களாக வலுவான உறவுகளைப் பேணி வருகின்றன, இதன் அடிப்படையில் இராச்சியம் எண்ணெய் விநியோகிக்கிறது மற்றும் வல்லரசு பாதுகாப்பை வழங்குகிறது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் சவுதி முகவர்களால் அமெரிக்காவைச் சேர்ந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரிசல் அடைந்தன.

முக்கிய விமர்சகரான கஷோகியைப் பிடிக்க அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை முடிவு செய்தது.

ஆனால், சவுதி அரசாங்கம் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. ட்ரம்ப் தனது வருகையின் போது இந்த சம்பவத்தை குறிப்பிடவில்லை, பின் சல்மானை “நம்பமுடியாத மனிதர்” என்று அழைத்தார்.

அத்துடன், “நாங்கள் ஒருவரையொருவர் மிகவும் விரும்புகிறோம் என்று நான் நம்புகிறேன்,” என்று ட்ரம்ப் கூறினார். மத்திய கிழக்கில் பாதுகாப்பு விடயங்களை விட முதலீட்டில் கவனம் செலுத்தும் பயணமாக ட்ரம்ப் புதன்கிழமை ரியாத்திலிருந்து கத்தாருக்கும், வியாழக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.