இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி
தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை நோக்கி குண்டு வீச்சை நடத்த முயன்றதாக கூறப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த 26 வயதான முத்துச்செல்வன் என்ற இளைஞரே, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நினைவிடத்தில் காவலில் இருந்த பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞர் வழங்கிய வாக்குமூலம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழி தீர்க்கும் முகமாகவே, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், தாம், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றதாக, அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தாம் நூல்கள் வாயிலாக, இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை தமிழர்களின் இறப்புக்களுக்கு பழிவாங்கும் விதமாகவே, கருணாநிதி நினைவிடத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றதாக கூறியுள்ளார்.
எனினும், முத்துசெல்வன் முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை கூறுவதாகவும், அவர் மன நலமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.