தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்தபோது மயக்கம் அடைந்துள்ளார்.
சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அவரை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.