ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ள கொழும்பின் வாகன திருட்டுக்கள்

0 1

வாகன திருட்டுகள் தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அண்மையில் கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியில் தமது மனைவியுடனும் அவரின் தாயுடனும் சிற்றூந்தில் விற்பனையகம் ஒன்றுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர், குறித்த சிற்றூந்தை செயலிலேயே வைத்து விட்டு விற்பனையகத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இரண்டு பெண்களும் சிற்றூந்துக்குள்ளேயே இருந்துள்ளனர். எனினும் குறித்த சிற்றூந்தின் கதவுகளை உட்பக்கத்தில் பூட்டிக்கொள்ளுமாறு குறித்த குடும்பஸ்தர் அவர்களுக்கு அறிவுறுத்தவில்லை.

இதன்போது வாகன திருட்டில் ஈடுபடும் ஒருவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிற்றூந்துக்குள் ஏறி அதனை கடத்திச் சென்றார். உடனடியாக தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த சிற்றூந்தை துரத்திச் சென்ற பொலிஸார் அதன் நிறுத்தியபோதும், கடத்தல்காரர் இலகுவாக தப்பிச்சென்றிருந்தார்.

இதேபோன்று கொழும்பின் புறநகர் கல்கிஸ்சையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணவரும் மனைவியும் சிற்றூந்தில் பயணித்த நிலையில், கணவர் மனைவியை சிற்றூந்துக்குள் இருக்கச்செய்து விட்டு வங்கி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

எனினும் சிற்றூந்தின் கதவுகளை உள்ளே பூட்டிக்கொள்ளுமாறு அவர் மனைவியிடம் அறிவுறுத்தவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாகன கடத்தல்காரர் ஒருவர், சிற்றூந்துக்குள் ஏறி, அதனை கடத்திச் சென்றுள்ளார்.

அத்துடன் சிற்றூந்துக்குள் இருந்த பெண்ணை சிற்றூந்தில் இருந்து இறங்கவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனினும் அந்த பெண், பயத்தில் ஓடும் வாகனத்தில் வெளியே பாய்ந்து தப்பியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த கடத்தல்காரர், வாகனத்தை கொழும்பை நோக்கி கடத்திச்சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த சிற்றூந்தை பயன்படுத்தி தெஹிவளையில் தங்கச்சங்கிலி பறிப்பு ஒன்று தொடர்பான முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.