வாகன விற்பனை நிலைய உரிமையாளரிடமிருந்து அரச ஆவணங்கள் மீட்பு

0 14

தனியார் வாகன விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரிடமிருந்து வாகனங்கள் தொடர்பான பெருமளவான அரச ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குருநாகல் பிரதேசத்தின் வாரியபொல நகரில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள தனியார் வாகன விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவர் , மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனங்கள் பதிவு செய்தல், உரிமையை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைத் தம் வசம் வைத்திருந்துள்ளார்.

அதனைக் கொண்டு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்தல், உரிமை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார் .

அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ள மொண்டரோ ரக வாகனமொன்றை 2002ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லொறியொன்றின் பதிவை பயன்படுத்தி வாகனத்துக்கான இலக்கத்தகடு பெற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய குறித்த வர்த்தகரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் 09ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.