அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாக தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல என்று அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல. அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்.
எனவே முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. நாம் சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
இந்த கைதிகள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட குற்றங்கள் மிகவும் கடுமையானவை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான கொலைச்சதி, பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு மற்றும் தலதா மாளிகை குண்டுவெடிப்பு போன்ற பெரிய சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனவே அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவை எளிதாக எடுத்துவிட முடியாது. சமூகத்திற்குள் ஒற்றுமையை வளர்ப்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக எவரும் சூழ்நிலையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
தற்போது இந்தக் கைதிகள் குறித்த அறிக்கையை மேலும் மதிப்பாய்வு செய்வதற்காக சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.