பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்(Saroja Savithri Paulraj) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்(Vavuniya) உள்ள சிறுவர் இல்லங்களை பார்வையிட்டமை தொடர்பில் இன்று(2) கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
”சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள் என்பவற்றுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
500 மில்லியன் ரூபாய் இதன் வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும், மனிதவளத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அபிவிருத்திக்காகவும், அவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாணவர்களுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு, சப்பாத்து வவுச்சர், பாடநூல், சீருடை, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் அங்கி என்பன வழங்கப்பட்டுள்ளன.
இனி பாடசாலையில் இருந்து பொருளாதார சுமை காரணமாக இடை விலக முடியாத வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.
கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமருடனும் இது தொடர்பில் பேசியுள்ளோம்.
இடைவிலகளுக்கு பின் சிறுவயது திருமணங்கள், சிறு வயது விவாகரத்து தொடர்பிலும் கவனம் செலுத்தி அவர்களுக்கான ஒரு கல்வியை வழங்குவது தொர்பிலும் ஆலோசித்து வருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.