முடிந்தால் செய்து காட்டுங்கள்…! அநுர அரசுக்கு சவால் விடுத்த அர்ச்சுனா எம்பி

0 0

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள், நாங்கள் பில்லியன் ரில்லியன் கணக்கான நிதியைக் கொண்டு வருகின்றோம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

சீனாவிடமும் இந்தியாவிடமும் (India) நீங்கள் பிச்சை எடுத்து விட்டு அதில் எங்களுக்கு 0.01 வீதத்தை பிச்சை போடுகின்றீர்கள் என்று இராமநாதன் அர்ச்சுனா கடுமையாகச் சாடினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (25.2.2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “வரவு – செலவுத் திட்டத்தில் வடக்குக்கு ஏதோ பெரிதாக ஒதுக்கி விட்டதாக கூறுகின்றீர்கள்.

தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயாராக இல்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். எனது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். முடிந்தால் நீங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குங்கள்.

நாங்கள் உங்களுக்கு பில்லியன் ரில்லியன் கணக்கான பணத்தை கொண்டு வருகின்றோம் நாங்கள் உங்களுக்கு பிச்சை போடுகின்றோம்.

சீனாவிடமும் இந்தியாவிடமும் நீங்கள் பிச்சை எடுத்து விட்டு அதில் எங்களுக்கு 0.01 வீதத்தை பிச்சை போடுவீர்கள்.

கைத்தொழில் துறைக்கு நீங்கள் மொத்தமாக ஒதுக்கிய மொத்த செலவீனத்தில் 1.54 வீதம். கே.கே.எஸ்ஸை நாங்கள் கட்டுவோம். முடிந்தால் கே.கே.எஸ்ஸை எங்களிடம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு சீமெந்து தருகின்றோம்.

வடக்கு கிழக்கில் இருந்து நான் உங்களுக்கு எல்லாம் தந்தோம். ஆனால் நீங்கள் எமது உதிரங்களை எடுத்துவிட்டு இப்போது 0.00 அளவில் பிச்சை போடுகின்றீர்கள்.

யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் அரச வாகனத்தைக் கொண்டுபோய் மோதி உடைத்துள்ளார். இந்த நிலையில் அரச அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் 56 மில்லியன் ரூபாவில் 35 மில்லியன் ரூபாவை எடுக்கப் போகிறாராம். அப்படியானால் நாங்கள் என்ன தேங்காய்களா?

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி (Anura Kumara Dissanayake) கூறினார். ஆனால் நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை இருந்தால் பட்டியல் தாருங்கள் என்று கேட்கிறார். இது கேவலம்.

கிளீன் சிறிலங்கா செயலணியில் ஒரு தமிழன் முஸ்லிம் இருக்கிறார்களா? இல்லை இதுதான் உங்கள் நல்லிணக்கம்.

இவற்றைச் சொன்னால் நாங்கள் மோசமானவர்கள். அரசுடன் டீல் வைத்துக்கொள்ளும் தமிழ்ப்பிரதிநிதிகள் நல்லவர்கள் என்பார்கள்” என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.