ஜனாதிபதி நிதியத்திடமிருந்து எம்.பிக்கள் பெற்ற பணம்: தயாசிறி கடும் சீற்றம்

0 1

ஜனாதிபதி நிதியத்திடமிருந்து (President’s Fund) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவ தேவைக்காக உதவித்தொகையைப் பெறுவது சட்டத்துக்கு முரணானதோ அல்லது கொள்ளை குற்றமோ அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் இதிலிருந்து உதவியைப் பெறப்போவதில்லை என்று உறுதிமொழியெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (20) கொழும்பில் (Colombo) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இதய சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பெற்றுக் கொண்ட நிதி தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வில் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மருத்துவ தேவைகளுக்காக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகளும் கிடையாது. அதேபோன்று அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வது கொள்ளைக் குற்றமும் கிடையாது.

நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்கும் கோரிக்கை விடுத்து ஒரு தொகை நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சுமார் 100 இலட்சத்துக்கும் அதிக நிதி பெற்றுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

எனினும் இந்த பட்டியலில் சகல அரசியல்வாதிகளதும் பெயர்களை வெளியிட்டதன் ஊடாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எதிர்பார்ப்பது என்ன? நிதியை விடுவிப்பது குறித்த தீர்மானமெடுக்கும் நிர்வாக சபையில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மேலும் இருவர் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதி நிதிய சட்டத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள காரணிகளுக்காக நிதியை விடுவிக்கும் அதிகாரம் இந்த நிர்வாகசபைக்கு உண்டு. அதற்கமையவே அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு கணக்காய்வாளர் நாயகத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு கணக்காய்வாளர் அறிக்கையில் நலிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த காரணிகள் தொடர்பில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. அரசியல்வாதிகளுக்கு அந்த நிதியை விடுவித்தமை தவறு என்றும் எங்கும் குறிப்பிடப்படவுமில்லை.

2019ஆம் ஆண்டு அரச அங்கீகாரம் பெற்ற தனியார் வைத்தியசாலையான ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியர் எனக் குறிப்பிடப்படும் நலிந்த ஜயதிஸ்ஸ, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு செயற்படுவது பொருத்தமற்றது. எனது சத்திர சிகிச்சைக்கு 8 இலட்சத்து 65,000 ரூபா செலவாகியுள்ளது.

இந்த மொத்த தொகையில் ஒரு பகுதியை மாத்திரமே நான் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பெற்றிருக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மனிதாபிமான அடிப்படையில் எனக்கு அந்த உதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அரசியல்வாதிகள் என்பதற்காக 100 – 300 இலட்சம் வரை பெற்றிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதேவேளை ஏனையோர் குறிப்பிட்டவொரு தொகையைப் பெற்றிருப்பது தவறு என்றும் கூற முடியாது. மாறாக அது தவறு என்று நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுவாரெனில் ஜனாதிபதி நிதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.

அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்ககளும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியைப் பெறப்போவதில்லை என்று உறுதிமொழியெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில் உதவித் தொகையைப் பெற முடியாது என்ற யோசனையை முன்வைத்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்“ என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.