போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட திட்டத்தை வகுத்து அபிவிருத்தி செய்யுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) வேண்டுகோள் விடுத்து்ளளார்.
யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (13) நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.
எனவே அரசாங்க நிதியிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும். ஏனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது.
மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் (Colombo) தான் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டத்தால் தான் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. இவ்வாறான திட்டங்களை மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும்.
கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்” என தெரிவித்தார்.