சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் பல்வேறு அறிக்கைகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான செய்திகள் உண்மையாக இருந்தால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சபாநாயகரின் அறிக்கைக்குப் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
“சபாநாயகர் தகுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட பிறகு பரிசீலிப்போம்.அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் சொல்கிறேன்” என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகள் பரவியிருந்தன.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தமக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறினால் அதனை நிரூபித்து காட்டுமாறு சபாநாயகருக்கு சவால் விடுத்திருந்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் வலம் வரும் குறித்த தகவல்கள் உண்மையாக இருந்தால் சபாநாயகர் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.