தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய தமிழ் அமைச்சரின் ஆதங்கம்

0 1

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம், தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடக பதிவில் அவர், இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம். நான்கு வருடங்களிற்கு முன்னர் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாரம் முழுவதும் தமிழ் சமூகத்தினரும் இளைஞர்களும் தமிழ் இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்து கொள்வார்கள்.

மேலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் தலைமுறைகளிற்கு இடையிலான மன உளைச்சல் குறித்து அறிந்து கொள்வார்கள்.

இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்வால் குறிக்கப்படவில்லை. அது ஒரு செயல்முறை, ஒரு குழுவினரான மக்களை, ஒழித்து அழிக்க அரசு தொடர்ந்து செய்யும், தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வடிவம். மே 2009ம் ஆண்டு தமிழர் இனப்படுகொலையின் உச்சமாக குறிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக்குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடர்கின்றது, 167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அங்கீகரிப்பது, நீடிக்கும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.