புதிய ஆட்சியாளர்கள் மாறிவருகின்றபோதிலும் தமது குரலை எவருமே செவிசாய்க்கவில்லை என கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தின் தலைவர் நாகேந்திரன் ஆஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமது தொடர்ச்சியான போராட்டங்களின் போது தமது பக்கமாக நின்ற அநுர அரசாங்கமானது, ஆட்சிக்கு வந்த பின்னராக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் சாதிப்பது ஏன் என ஆஷா கேள்வியெழுப்பினார்.
அத்தோடு, காலங்கள் மாறுகின்ற போதிலும் எமது நாட்டில் தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் மாறிவருகின்ற போதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நிலமை தொடர்கதையாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடி வீதியில் இறங்கி பெண்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலே தற்போது அத்தியாவசிய பொருட்களது விலைகளும் குறைந்தபாடில்லை ஆகையால் தமக்கு எங்கு பார்த்தாலும் இன்னல்களே காணப்படுவதாக நாகேந்திரன் ஆஷா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைபார்க்கச் செல்லும் பெண்களது நிலமைகளும் அவர்களது பிள்ளைகளது வாழ்வும் தொடர்ச்சியான இன்னல்களை சந்திக்கும் நிலையாகவே காணப்படுவதாகவும் இதிலிருந்து பெண்கள் விடுபட்டு தமது வாழக்கையை நடத்த மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.