ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க(Champika Ranawaka) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பொதுஜன பெரமுனவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வேட்பாளராக இருப்பார் என்பதை நாட்டின் அரசியல் தரப்பின் சில பிரிவினர் இதுவரை நம்பவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த பிரிவில் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் உள்ளடங்கியுள்ளார்.
இந்நிலையில், சம்பிக்க ரணவக்க தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகொண்டபோது அவர் சமல் ராஜபக்சவை சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இதன்படி இடம்பெற்ற சந்திப்பின்போது, ரணில் விக்ரமசிங்கவின் முடிவை தாம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பசில் ராஜபக்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில்,
ஏற்கனவே ஜனாதிபதியாக பதவியில் இருந்த ஓருவரே தற்போதைய பிரச்சினையை தீர்க்கக்கூடியராக இருப்பார் என்றும், எனவே அவ்வாறான ஒருவரையே தமது கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் என்றும் பசில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சம்பிக்க ரணவக்க தமது முயற்சியை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களை ரணில் மேற்கொள்கின்றபோதும், இன்னும் வேட்பாளராக வருவதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை.
பெரும்பாலும் பசில் ராஜபக்சவுக்கு ஏற்கனவே வழங்கிய உறுதிமொழியின்படி, எதிர்வரும் 15ஆம் திகதியளவில் அவர் தமது வேட்பாளர் நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.