பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் பரிதாப மரணம்!

15

பாகிஸ்தானில் (Pakistan) நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விசவாயு கசிவினால் 11பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சுமார் 1,500 அடி ஆழத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சுரங்கத்தில் திடீரென விசவாயு கசிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் சுரங்கத்தின் மற்றைய பகுதிகளுக்கும் இந்த விசவாயு வேகமாக பரவியதால் அங்கிருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர்.

தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுரங்கத்துக்குள் தூய காற்றை செலுத்தினர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரங்க மேலாளர், ஒப்பந்ததாரர் உட்பட 11 பேர் மயங்கி கிடந்தனர்.

மீட்பு படையினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி இறந்ததாக மருத்துவர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.