ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பிரச்சினைகளைத் தவிர, தற்போது தனது சொந்தக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் வெளியேயும் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara), சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்கள் நீடிக்க வேண்டும் என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையிவ், குறித்த கருத்தை அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்த்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது குறித்து விக்ரமசிங்க தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே ரங்கே பண்டாரவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
இந்த அறிக்கையின் மூலம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும், பொதுச் செயலாளரும் ஒரே அரசியல் பக்கம் இல்லை என்பதும் ரணிலின் திட்டம் பற்றி ஏனையவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்சி மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அரசியல் முடிவுகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட உணர்வு காரணமாக ரங்கே பண்டார சில காலமாக அதிருப்தியில் இருந்தார் என்று அது சுட்டிக்காட்டியுள்ளது
இந்தநிலையில் தற்போது அவர் வகித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்க விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த சில கட்சியின் மூத்த தலைவர்களிடமிருந்தும் தமது தற்போதைய கருத்துக்காக அவர் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளார்.
ரங்கே பண்டாரவின் கருத்துக்களைத் தொடர்ந்து அவர் உண்மையில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் பணிகளை நாசப்படுத்த முயற்சிக்கின்றாரா என்ற ஊகமும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பின்னர் விக்ரமசிங்கவின் ஆலோசகர்களில் ஒருவரான ஆசு மாரசிங்கவும், நாடு பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க விரும்பினால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது ஒரு விருப்பமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு முன்னர், தனது சொந்த கட்சியில் உள்ள எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதை முதலில் பார்க்க வேண்டும் என்பது தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் தன்னை ஒரு தேசிய வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’மற்றும் ‘உறுமய’போன்ற பல திட்டங்களின் வடிவில் தற்போது அவர் பல பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க, தற்போது பல பொது நிகழ்வுகளில் பொது மக்களுடன் அதிகமாக கலந்து பேசுவதையும் காணமுடிகிறது.
Comments are closed.