திருகோணமலை – புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியதில் மாணவர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவருக்கும், உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையே நேற்று (15) காலை பாடசாலையில் வைத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்தர மாணவர் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர் மீது கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த மாணவரின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குறித்த மாணவனுக்கு சத்திர சிகிச்சை நிபுணர் குழுவினர் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொண்டு அவரை உயிராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.