கொழும்பு – கொட்டாவை, மலபல்ல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொட்டாவை, மலபல்ல பிரதேசத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் இருந்து தோட்டாக்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் மொனராகலை – உடவளவை பிரதேசத்தில் நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.