அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சியின் தவறை ஏற்றுக்கொண்ட அமைச்சர்

0 0

கடந்த அரசாங்கத்தின் போது புத்தாண்டுக்காக ஜனாதிபதி அனுப்பிய குறுஞ்செய்திகளின் கட்டணத் தொகை குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி முன்வைத்த புள்ளிவிபரங்களில் தவறு இருப்பதை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வழக்கமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்திகளை அனுப்பாததால் இந்த ஆண்டு அரசாங்கம் 98 மில்லியன் ரூபாய்களை மிச்சப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி கூறியிருந்தார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி குறிப்பிட்ட கட்டணத் தொகை தவறானது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையிலிருந்தே அவர் இந்தத் தகவலைப் பெற்றுள்ளார்.

நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. எனவே, நாம் சொல்வதற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற தவறுகள் நமக்கு தீங்கு விளைவிக்கும். அவற்றை சரிசெய்ய நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

ஒன்று அல்லது சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் அல்லது அறிக்கைகள் முழு அரசாங்கமும் பொய்யான விடயங்களை செய்வதாக மக்களை நினைக்க வைக்கக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், அமைச்சரவை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தவறை சரிசெய்வதன் மூலமோ அல்லது மன்னிப்பு கேட்பதன் மூலமோ அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.