பாதுகாப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, சிறப்பு நடவடிக்கையாக, அனுராதபுரம் விமான நிலையத்தினை, ஒரு நாள் சர்வதேச விமான நிலையமாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திலிருந்து தென்னிந்தியாவின் ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார்.
இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர் கட்டுநாயக்கவுக்குத் திரும்பாமல், சிறப்பு ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அவர் அனுராதபுரத்திலிருந்து தமிழ்நாட்டிற்குப் பயணித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய மோடி மற்றும் அவரது குழுவினருக்குத் தேவையான பயண அனுமதி வசதிகளை வழங்குவதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகியவை காணப்படுகின்றன.
இந்த நிலைமையை உறுதிப்படுத்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சாகர கொட்டகதெனிய, அனுராதபுரம் விமான நிலையம் 6 ஆம் திகதி ஒரு நாள் மட்டுமே சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் விமான நிலையம் பொதுவாக சர்வதேச விமானங்களை இயக்குவதற்குத் தேவையான வசதிகளைக் கொண்ட விமான நிலையம் அல்ல என்றும், பெரிய விமானங்களை தரையிறக்கத் தேவையான உள்கட்டமைப்பு அதில் இல்லை என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்குத் தேவையான அனுமதியை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கொட்டகதெனிய மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மற்றைய குழு ஜூலை 6 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.