தன்னுடைய அனுமதி இல்லாமலும், தனக்கு தெரியாமலும் தன்னை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளராக அடையாளப்படுத்தியுள்ளதாக நிசாந்தி பிரியங்கிகா என்ற முறைப்பாடளித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எனது பெயர் P.H.A நிசாந்தி பிரியங்கிகா நான் கதிரை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு எதுவுமே அறிவிக்காமல் எனது பெயர், முகவரி, எனது தேசிய அடையாள இலக்கம் என என்னிடம் கூறாமல் தேர்தல் வேட்பாளராக என்னை பெயரிட்டுள்ளனர்.
அந்தத் தேர்தல் தொகுதி எனக்கு சொந்தமானதும் அல்ல , தேர்தலில் போட்டியிட எனக்கு இஸ்டமும் இல்லை. அது பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. ஆகவே விரைவில் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நான் போட்டியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
காலி செயலகத்தில் நான் முறைப்பாடு செய்துள்ளேன். இது தொடர்பில் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். நான் எங்கேயும் கையொப்பமிடவும் இல்லை.
என்னிடம் தேசிய அடையாள அட்டை கேட்கவும் இல்லை. எனக்கு அறிவிக்கப்படவும் இல்லை.
உங்கள் மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார் அல்லவா? என்று எனது கணவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
அவர் வீட்டுக்கு வந்து சத்தமிடும் போதுதான் நான் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளேன் என்று தெரியவந்தது.
எந்தக் கட்சியின் சார்பிலும் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. நான் பெயரை கொடுக்கவும் இல்லை. பொய்யாக எனது பெயரை இணைத்திருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.