மியான்மாரில்(Myanmar) ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் அவசர நிலையின் போது +66 812498011 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாங்காக் மற்றும் தாய்லாந்தின் பிற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 200 இலங்கையர்கள் மியான்மரில் தங்கியிருப்பதாகவும், மற்றொரு இலங்கையர் குழு தாய்லாந்தின் பாங்காக்கில் தங்கியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் மியன்மார் மற்றும் பாங்காக்கில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் பாங்கொக்கில் ஒரு உயரமான கட்டிடம் இடிந்து விழும் காணொளியையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன, மேலும் 70இற்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.