முன்னாள் படைத்தளபதிகள் மூவர் உட்பட நால்வர் மீதான தடை மூலம் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரித்தானியாவிற்கு, நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,”எமது நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சிவில் யுத்தத்துக்குத் தலைமை தாங்கிய 3 படைத் தளபதிகளுக்குப் பிரித்தானியா தடை விதித்திருக்கின்றது.
இது சர்வதேசம் தொடர்பான பிரித்தானியாவின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகின்றது.
ஏனெனில் காசாவில் இஸ்ரேல் இராணுவம் அங்கு பாரிய இனப்படுகொலைகளை மேற்கொள்ள அமெரிக்கா உதவி வருகின்றபோது, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்திற்கு தலைமை தாங்கியமைக்காக எமது படைத் தளபதிக்குப் தடை விதித்திருக்கின்றது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பிரேரணை கொண்டு வந்தபோது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்காமல், உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதாகத் தெரிவித்திருந்தனர்.
அந்தப் பிரேரணை தற்போதும் செல்லுபடியானதாக இருக்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த முயற்சியிலேயே இருந்து வருகின்றன.
எமது நாட்டின் உள்ளக விடயங்களில் சர்வதேச சக்திகள் தலையிடுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
அதனால் எமது நாட்டின் கெளரவத்தை அரசு மதிப்பதாக இருந்தால், பிரித்தானியாவின் இந்தத் தடை விதிப்பை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.