கச்சத்தீவை “ஒப்படைக்க” இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிரான வழக்கில், 2018இல் காலமான முன்னாள் தமிழக முதல்வர் எம். கருணாநிதிக்குப் பதிலாக திராவிட முன்னேற்றக்கழக பொருளாளர் டி.ஆர். பாலுவை, இந்திய உயர்நீதிமன்றம், மனுதாரராக இன்று அனுமதித்தது.
இந்திய தலைமை நீதியரசர் சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வு, மனுதாரர் தரப்பில் மூத்த சட்டத்தரணி பி. வில்சனின் சுருக்கமான பூர்வாங்க சமர்ப்பிப்பை விசாரித்தது.
இதன்போது, 1974 ஜூன் 26 மற்றும் 1978 மார்ச் 23 ஆகிய தினங்களில் செய்யப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களும், கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைப்பது தொடர்பான தகவல்தொடர்புகளும் அரசியலமைப்பிற்கு விரோதமானவை மற்றும் செல்லுபடியற்றவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 15ஆம் திகதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு, அவர் இறந்த பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.