இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்

0 32

இந்தியாவில் (India) தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vedanayagan) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(22.03.2025) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது.

அவர்கள் மீண்டும் இலங்கை வரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் நாடு திரும்புவர்களுக்கான உதவிகள் வழங்கப்படும்.

அத்துடன், , ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும்.

கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈழ அகதிகள் நாடு திரும்பும் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் சின்னதம்பி சூரியகுமாரி, “இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர். அவர்களில் 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.