பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் பற்றிய விசாரணை முடிவுகளை பாதுகாப்புக் காரணம் கருதி வெளிப்படுத்த முடியாதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(24.02.2025) எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்“பாதாளக் குழுக்களுக்கு மத்தியில் இடம்பெறும் மோதல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. மக்களின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குழுக்களுக்கிடையில் இடம்பெறும் மோதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏற்கனவே சபையில் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜனாதிபதியும் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால் தகவல்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவித்து, விசாரணைகளைக் குழப்ப முடியாது.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் குறிப்பிடப்படும் காவல்துறையினர், மற்றும் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நீதிமன்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க தேவையான தகவல்களை மாத்திரம் அடிக்கடி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலதிக தகவல் தேவையென்றால் எதிர்வரும் 28ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினதும் செலவு தலைப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது.
அதன்போது அறிந்து கொள்ளலாம். அப்போது விசாரணைகளுக்கு பாதிப்பில்லாத தகவல்களை வழங்க முடியும்”என அவர் தெரிவித்துள்ளார்.