கனடாவின்(Canada) பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா(Chandra Arya) தனது தாய்மொழியில் பேசி ஆதரவு திரட்டியுள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சபையில் உரையாற்றுகையிலேயே அவர் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசியுள்ளார்.
கனேடிய பிரதமர் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்தநிலையில், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
பதவி விலகினாலும் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவி வருகின்றது.
இந்திய வம்சாவளியும், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருமானமான சந்திரா ஆர்யா உள்ளிட்டோர் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
இந்த சூழலில், தான் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில், பிரதமர் பதவிக்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பின்னர், அந்நாட்டு சபையில், தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசிய அவர்,
“நாடு ஒரு கடுமையான புயலை எதிர்கொள்கிறது. பல கனேடியர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் போராடி வருகின்றனர். பல குடும்பங்கள் நேரடியாக வறுமையில் மூழ்கியுள்ளன.
கனடாவின் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளுக்கு, இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க வளர்ந்து வரும் சந்தையாக உள்ளது.
இதனால், நம் தேவைகள் நிச்சயம் பூர்த்தியாகும். பெரிய முடிவுகளை எடுக்க பயப்படாத தலைமைக்கு கனடா தகுதியானது. விவேகம் மற்றும் நடைமுறைவாதத்தை என் வழிகாட்டும் கொள்கைகளாக வைத்து, பிரதமர் பதவி வேட்பாளராக போட்டியிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.