ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மாத்திரம் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
முகநூலில் இட்ட பதிவொன்றின் மூலமே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த சுவரில் சுதந்திர இலங்கையின் அனைத்து அரச தலைவர்களின் புகைப்படங்களும் அண்மைக்காலம் வரை கௌரவமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மட்டுமே இருப்பதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அலுவலகம் ஒரு கட்சி அலுவலகம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையின் முன்னாள் அரசத்தலைவர்களான டி.எஸ்., டட்லி, சேர் ஜோன், பண்டாரநாயக்க, தஹநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர், பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால, கோட்டாபய, ரணில் போன்றோரின் வரிசையில் இருப்பதற்கு அநுரவும் தகுதியானவர் என கூறிய தென்னகோன், அநுரவை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.